வியத்மக என்று குறிப்பிட்டுக் கொண்டு கோட்டபய ராஜபக்ஷவை தலைவராக்கி அவரை விரட்டியடித்து, நாட்டை வீழ்த்தியவர்கள் இன்று எதிர்க்கட்சித் தலைவருடன் ஒன்றிணைந்துள்ளார்கள். அவருக்கும் கயிறு கொடுக்கிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியவர்கள் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். போலியான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். தபால்மூல வாக்களிப்பில் ஜனாதிபதி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறந்த பௌத்தர். இதனால் தான் அவர் தலதா மாளிகையின் முன்னிலையில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளார். அவரிடமே சிறந்த அணி உள்ளது. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும். முன்னேற்றகரமான நாடுகளில் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் தேர்தலில் தாம் தோல்வியடைவதை அறிந்தால் போட்டியில் இருந்து விலகிவிடுவார்கள். தோல்வியடைவது தெரிந்தும் ஜனாதிபதி போட்டியிடுகிறார் என்றார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஒருசிலர் பாராளுமன்றத்தை தேர்தல் பிரச்சார மேடையாக மாற்றிவிட்டார்கள். இவர் யார் (நாலக கொடஹேவாவை நோக்கி) இவர் எங்கிருந்து அரசியலுக்கு வந்தார். விளையாட்டு கழகத்துக்கு 50 இலட்சம் நிதி வழங்கிய வழக்கு உள்ளது. ராஜபக்ஷர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் வகையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.வரலாற்றை நாங்கள் அறிவோம்.
நாட்டின் கடற்பரப்பில் தீப்பற்றி எறிந்த நியூ டைமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட விளைவுகளுக்கு நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் நெருக்கடியை இவர்கள் தான் உருவாக்கினார்கள். பேலியகொட வியாபார கட்டிடத் தொகுதியில் கடை வழங்கியது யார், அப்போது நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்தது யார் இவர்கள். தற்போது இங்கு வந்து கருத்து கணிப்பு பற்றி பேசுகிறார்கள்.
பாராளுமன்றத்தில் இவரது இறுதி நாளாக புதன்கிழமை (4) இருக்கும். இவர்கள் பல்கலைக்கழகத்துக்கு சென்ற காலத்தில் நாங்கள் பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்தோம். ஐக்கிய மக்கள் சக்தியை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இன்று இவர்தான் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார ஆலோசகர்.
கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இவர்கள் தான் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டாம் என்று குறிப்பிட்டுக் கொண்டு மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுடன் ஒன்றிணைந்து குறிப்பு எழுதினார்.கோட்டபய ராஜபக்ஷ பதவி துறக்கும் சூழலை இவர்கள் தான் துரிதப்படுத்தினார்கள்.
கோட்டபய ராஜபக்ஷவை தவறாக வழிநடத்தி நாட்டை வீழ்த்தினார்கள். எதிர்க்கட்சித் தலைவருக்கும் கயிறு கொடுப்பார்களோ என்று கவலையடைகிறேன்.தற்போது கயிறு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதற்கு இவர் யார்?
கோட்டபய ராஜபக்ஷவை தவறாக வழிநடத்திய இவருக்கும், கோட்டபய ராஜபக்ஷவுக்கும் அரசியல் அனுபவம் கிடையாது.அனுபவம் உள்ளவர்களையும் கவனத்திற் கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்ஷவிடமும் கேட்கவில்லை. வியத்மக என்று குறிப்பிட்டுக் கொண்டு 69 இலட்ச மக்களாணையை இல்லாதொழித்தார்கள்.பலவீனமான இவர் இன்று ஜனாதிபதியை விமர்சித்து சேறு பூசுகிறார்.
தபால் மூல வாக்களிப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவார் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறேன்.போலியான கருத்துக்கணிப்புக்களை மக்கள் மயப்படுத்த வேண்டாம்.இவரது பொருளாதார ஆலோசனைகளை பெற்றால் மீண்டும் நாடு வங்குரோத்து நிலையடைய நேரிடும்.
ராஜபக்ஷர்களின் புகைப்படத்தை கொண்டு கம்பஹா மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகி கோட்டபய ராஜபக்ஷவை விரட்டியடித்த இவர்கள் இன்று எதிர்ப்பக்கம் சென்றுள்ளார்கள்.அதிகாரத்தில் இருக்கும் போது நான் அரசாங்கத்தில் இருக்கவில்லை. வங்குரோத்து நிலையடைந்த பின்னரே எம்மை அழைத்தார்கள்.ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து சவால்களை பொறுப்பேற்றோம் என்றார்.