வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் பேரினவாதத்திற்கு துணைபோகும் – சிறிநேசன்

முக்கிய செய்திகள் 1

வாக்களிப்பினை பகிஸ்கரித்தல் என்பதும் மறைமுகமாக பேரினவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடாகவே நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக இந்த நாட்டில் தமிழ் மக்களும் சமஉரிமை பெற்று வாழவேண்டும் என்பதை நிலை நிறுத்துவதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றோம்.

இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கும் தீர்மானத்தினை அறிவுத்துள்ள நிலையில் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரும் மாவட்ட குழுவின் செயலாளருமான ஞா.சிறிநேசன் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தட்டுமுனை பகுதியில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

வாகரை பிரதேச பொது அமைப்புகளின் ஒருங்கமைப்பில் பிரதேச சிவில் க.இராசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அருண்தம்பிமுத்து,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,மா.நடராஜா மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.