அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக வேண்டும் என்பதே ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்பார்ப்பு என்பது அவர் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் ஆற்றிய உரையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான ஐக்கிய தேசிய கட்சியினர் என்னிடமே உள்ளனர். எனவே அவர்கள் எனக்கே வாக்களிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மினுவாங்கொடையில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பச்சை யானைகளும், சிவப்பு யானைகளும் இன்று ஒன்றிணைந்துள்ளன. அதனை ஜனாதிபதி ரணில் தனது பேச்சில் வெளிப்படுத்தியுள்ளார். ரணிலுக்கு வெற்றி பெறுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை.
எனவே உங்களது வாக்குகளை வீணடிக்காமல் நாட்டைக் கைட்டியெழுப்புவதற்கான ஆணையை ரணசிங்க பிரேமதாசவின் புதல்னான என் தலைமையிலான குழுவுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அநுரவுக்கு வாக்களிக்க இருப்போர், அவருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் கள்வர்களைப் பாதுகாக்கும் குழுவுக்காக வாக்குகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஊடகங்களிலும் அவ்வாறு தான் அவர்களுக்கு இடமளிக்கப்படுகிறது. நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே தான் இன்று ரணில் - அநுர ஒப்பந்தம் மிகத் தெளிவாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மக்களை முட்டாள்கள் எனக் எண்ணிக்கொண்டு அவர்கள் செயற்படுகின்றனர். எனவே 220 இலட்சம் மக்களிடமும் கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆணையை எமக்கு வழங்குங்கள். தாய் நாட்டை நாம் கட்டியெழுப்புவோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார்.