மக்களை கண்டுகொள்ளாத சஜித்,அநுரவிடம் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா?: ஜனாதிபதி ரணில்!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்திருந்த அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக இன்று பெரும்பான்மையான மக்களின் கௌரவம் தனக்குக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாரம்மல பிரதேசத்தில் நடைபெற்ற இயலும் ஸ்ரீங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் அணிந்துள்ள தொப்பி யார் தந்தது தெரியுமா? இந்த தொப்பி தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கும்
கிளிநொச்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் நான் கொழும்பு திரும்புவதற்காக இறங்கி வரும்போது, பெண் ஒருவர் இந்தத் தொப்பியை எனக்கு வழங்கினார்.

நான் உணவு, உரம், எரிபொருள் வழங்கி, மக்கள் வாழ வழிசெய்தமைக்கு அவர் எனக்கு நன்றி தெரிவித்தார், என்னை கௌரவப்படுத்தி இந்தத் தொப்பியை தந்தார். நன்றிக் கடன் செலுத்துவதற்காக எனக்கு வாக்களிப்பதாக அவர் கூறினார்.

மக்கள் கஷ்டப்படும் போது அதனைப் பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியவில்லை.
ஆனால் மக்கள் பட்டினியில் இருக்கையில் தேர்தல் நடத்துமாறு எதிரணியினர் கோரினர்.
கேஸ், பெற்றோல் இன்றி மக்கள் கஷ்டப்படும்போது, உள்ளுராட்சி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்தினால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?

மக்கள் கஷ்டப்படும்போது, நாம் இணைந்து செயற்படுவது தவறா? ஆனால் அவர்களின் கட்சியை உடைப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாம் யாரைப் பாதுகாத்தோம்.
ராஜபக்‌ஷவினரை நாம் பாதுகாக்கவில்லை. மக்களைத்தான் நான் பாதுகாத்தேன்.

2022 இல் சஜித்தும் அநுரவும் எங்கிருந்தனர். எங்கு மறைந்திருந்தனர். தற்போது உங்கள் எதிர்காலத்தை ஒப்படைக்குமாறு கோருகின்றனர்.

ஒப்படைக்கப் போகிறீர்களா? நாம் அனைவரும் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம். மக்கள் தவிக்கும் போது அதனை கண்டுகொள்ளாத சஜித் மற்றும் அநுரவிடம் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? ” இவ்வாறு ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.