பல்கலை மாணவியின் கால்களைக் காணொளி எடுத்த இராணுவ வீரர் கைது

முக்கிய செய்திகள் 1

ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவியின் கால்களைக் காணொளி எடுத்ததாகக் கூறப்படும் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.

பெலவத்தை இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபரான இராணுவ வீரர் கொழும்பிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த ரயிலிலிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கால்களை இரகசியமாக தனது கையடக்கத் தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார்.

இதனை அவதானித்த பயணிகள் சிலர் குறித்த பல்கலை மாணவியிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

பின்னர், ரயிலிலிருந்த பயணிகள் சிலர் இணைந்து சந்தேக நபரைப் பிடிக்க முயன்ற போது சந்தேக நபர் கையடக்கத் தொலைபேசியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.