சர்வதேச சிறுவர்தினமான இன்று செவ்வாய்க்கிழமை (01) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் எத்தனையோ சிறுவர் அமைப்புக்கள் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட எமது குழந்தைகளுக்கான நீதிப்பொறிமுறையினை ஒருவரும் ஏற்படுத்தி தரவில்லை. எனவே நாம் சர்வதேச நீதிகோரி எமது போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம்.
இந்நிலையில் எமது போராட்டங்களை குழப்பும் விதமாக சில விசமிகள் திட்டமிட்டு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர். இருப்பினும் எமக்கான நீதி கிடைக்கும் வரை நாம் இந்த போராட்டங்களை கைவிடப்போவதில்லை என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ் குழந்தைகள் பயங்கரவாதிகளா,சிறுவர் தினம் நீதி தேடும் தினம், பச்சிளம் குழந்தைகள் ஆயுதம் ஏந்தினரா போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை எழுப்பியிருந்தனர்.