எதிர்க்கட்சித் தலைவரின் புது நாடகம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனிமேல் அரசுடன் கடுமையான போக்கை கடைபிடிக்கப் போவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த அவர் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் 143 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், காணாமல் போனோர் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கின்ற போது சாதாரணமாக பேசுவதில்லை மிகவும் கடுமையாகவே பேசுகின்றேன். என்னுடைய மக்களுக்கு முடிவு சொல்ல வேண்டும் என்றும் கேட்டிருக்கிறேன். சரியான முடிவு தர சற்றுப்பொறுமையுடன் இருக்குமாறு கோரியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எல்லோரும் கடவுளை கும்பிடுவோம், காணாமல் போனோர் விடயம், குடியேற்ற விடயம், மக்களின் ஏனைய பிர்ச்சினைகள் எல்லாம் தீரவேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் ராஜபக்ஷ ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை, ஆனால் தற்போது சிலர் கருமங்கள் நடைபெறுவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதில் தாமதங்களும், பல்வேறு குழப்பங்களும் இருக்கின்றன. இருந்தும் இவை எல்லாவற்றையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும், எல்லாவற்றையும் வெற்றிகொள்ளும் வகையில் விடயங்களை கையாள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இவ்வாறான கருத்தினால் அங்கிருந்தவர்கள் அதிருப்தியடைந்த நிலையில், தேர்தல் நிறைவடைந்து, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களை நெருங்குகின்ற இன்றைய சூழலில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எவ்வித அக்கறையுமில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 03 மாதங்களுக்கும் மேலாக கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஜனாதிபதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட போது தமது பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளாது ஊடகங்களின் ஊடாக தமது பிரசாரங்களை முன்னெடுக்கும் நோக்கில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் வந்துள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.