ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
ஜெயிக்கா நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் 2ஆம் கட்டம் மற்றும் தொலைக்காட்சி ஔிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற வேலைத் திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஜெயிக்கா (JICA) நிறுவனத்தின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் 11 வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது குறித்து அண்மையில் ஜப்பான் தூதுவர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதோடு, அந்த செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவது குறித்தும் இன்றைய சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் 2ஆம் செயலாளர் கட்சுஹிரோ சுஷூகி (KATSUHIRO SUZUKI) உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.