போர்க்குற்ற விசாரணைக்கு புதிய அரசாங்கத்தை ஒத்துழைக்குமாறு வலியுறுத்த வேண்டும் – ஜெய்சங்கருக்கு கோரிக்கை!

முக்கிய செய்திகள் 3

இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது இலங்கை விஜயத்தின்போது, போர்க்குற்ற விசாரணைக்கு, முழுமையாக ஒத்துழைக்குமாறு இலங்கையின் புதிய அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ். ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 4ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தமது எக்ஸ் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த விஜயம் இலங்கைத் தமிழர்களுக்கு பயனும், அதிகாரமும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும், போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ள போதிலும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

எனவே, மாறிமாறி ஆட்சி செய்த பாரம்பரிய கட்சிகள் அல்லாத கட்சியைச் சேர்ந்த ஒருவர் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளார்.

எனவே, பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் இலங்கை ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும்.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்த வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ்.ராமதாஸ் கோரியுள்ளார்.

Trending Posts