
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபானசாலை ஒன்றை நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தி மதுவரி ஆணையாளர் நாயகத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த மதுபானசாலையின் உரிமையாளரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் மகேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள மதுவரி ஆணையாளர் நாயகம், மன்னார் பிரதேச செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பாணை விடுப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.