முடங்கி கிடப்பதற்கு நாம் கொள்கை கோட்பாடு அற்றவர்கள் அல்ல! செயலாளர் நாயகம் டக்ளஸ்

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

எமது இலட்சிய பயணத்தில் நாம் ஒரு போதும் இடையில் தரித்து நிற்கவோ முடங்கிக்கிடக்கவோ போவதில்லை. அவ்வாறு முடங்கி கிடப்பதற்கு நாம் கொள்கை கோட்பாடு அற்றவர்கள் அல்ல என கிளிநொச்சி மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நேசிக்கின்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவதில் சிறிது இடைவெளி இருக்கலாம். ஆனாலும் எமது பயணம் நின்றுவிடப்போவதில்லை.
எமக்கென்று ஒரு கொள்கை உண்டு, இலக்கு உண்டு,. அதை எட்டுவதற்கு ஒரு வேலைத்திட்டம் உண்டு.

அறம் சார்ந்த எம்மை அவதூறுகளால் யாரும் அசுத்தப்படுத்தி விட முடியாது.
அவ்வாறு கடந்த காலங்களில் எம்மீது அவதூறு கொட்டியவர்கள் எம்மை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாமலேயே தோற்றுப்போயினர். இது எமது மக்கள் ஆழமாக சிந்திப்பதற்கும், எம்மை நாமே புடம் போட்டு திடம் கொள்வதற்குமான ஓர் இடைவெளி.
இந்த இடைவெளியில் நீங்கள் மக்களிடம் முன்னரைவிட அதிகமாக செல்லுங்கள். மக்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறியுங்கள்.

கட்சியின் கருத்துக்களை எடுத்துச்சொல்லுங்கள்.எம் மீது புனையப்பட்ட பொய்களை உடைத்தெறியுங்கள். எம் மீதான அவதூறுகளின் சூத்திரதாரிகளையும் அதன் பின்னணிகளையும் காலம் மக்களுக்கு இனம் காட்டும். நீங்கள் கிராமங்கள் தோறும் எமது கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துங்கள்.

இவ்வாறு தெரிவித்த ஈ பி டி பி யின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும், விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் செய்து கொண்டு மக்களுக்கான வேலைத் திட்டங்களை தொடர வேண்டும் எனவும், உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் நடைபெற இருப்பதனை மனதில் வைத்து அவற்றுக்கும் தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Trending Posts