
அக்டோபர் 7 தாக்குதல்
கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் அந்நாட்டுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த அடியை எதிர்பார்த்திராத இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க பாலஸ்தீன நகரங்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
காசா போர்
அவ்வாறு தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள் கடந்த 13 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
முற்றிலுமாக உருக்குலைந்த காசா நகரில் அடிப்படை மருத்துவ வசதிகள், அத்தியாவசிய உணவு என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அகதிகளாக தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். போரை அமெரிக்கா, ஐநா என சர்வதேச அரங்கில் எடுக்கப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.
பெய்ட் லாஹியா தாக்குதல்
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீனத்தில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
நேதன்யாகு விஜயம்
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசா நகருக்கு நேற்று வருகை தந்துள்ளார். கடந்த மாதம் ஈரான் அணு சக்தி கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட நேதன்யாகு தெற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் காசாவுக்கு திடீர் வருகை தந்துள்ளது முக்கியத்துவமானதாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் மற்றும் ராணுவ தளபதியுடன் பாதுகாப்பு கவசம், பாலிஸ்டிக் ஹெல்மெட் சகிதம் காசாவில் நேதன்யாகு சுற்றிப்பார்த்த வீடியோவை இஸ்ரேல் பகிர்ந்துள்ளது.
? Netanyahu and Katz in the Netzerim corridor: "Hams will no longer be in Gaza" pic.twitter.com/9YspCVPR17
— Raylan Givens (@JewishWarrior13) November 19, 2024
பரிசு
ஹமாஸ் கடத்திச்சென்ற பணயக் கைதிகள் 250 பேரில் 101 பேர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். எனவே பணய கைதிகளை கண்டுபிடித்து இஸ்ரேலிடம் ஒப்படைப்பவர்களுக்கு ஒவ்வொரு பணய கைதிக்கும் தலா 5 மில்லியன் டாலர்கள் என்ற அடிப்படையில் [இந்திய மதிப்பில் 42 கோடி ரூபாய்] சன்மானம் அளிக்கப்படும் என்று காசா சென்ற நேதன்யாகு அறிவித்துள்ளார்.
பணய கைதியை எங்களிடம் ஒப்படைக்கும் நபரின் அடையாளம் பாதுகாக்கப்படும். அந்த நபர் குடும்பத்துடன் காசாவில் இருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல இஸ்ரேல் அழைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருடனோ? பிணமாகவோ?
மேலும் பணய கைதிகளின் இருப்பிடத்தை அறிந்து அவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அந்த முயற்சிகளைக் கைவிடப்போவதில்லை. அனைத்து பணய கைதிகளையும் உயிருடனோ? பிணமாகவோ? மீட்கும்வரை போரை தொடருவோம். யாரேனும் பணய கைதிகளுக்குத் தீங்கு விளைவிக்க நினைத்தால் அவர்கள் கொல்லப்படுவர் என்று நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.