பதுளை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக 477 குடும்பங்களைச் சேர்ந்த 1861 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம். எல். உதயகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடும் மழையினால் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுவரை கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், 247 வீடுகளுக்கு பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்துக்கு முகங்கொடுத்த 100 குடும்பங்களைச் சேர்ந்த 378 பேர் அவர்களது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உலர் உணவு நிவாரணப் பொருட்களை பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தில் கடுமையான அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள 113 குடும்பங்களைச் சேர்ந்த 411 பேரை பராமரிப்பதற்காக தற்காலிகமாக 7 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
லுனுகலை பிரதேச செயலாளர் பிரிவில் உடபங்குவ பகுதியில் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பார்க் தமிழ் வித்தியாலயத்திலும், மடுல்சீமை, ஊவாக்கலை தோட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் ஊவாக்கலை தமிழ் வித்தியாலயத்திலும், மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேர் பத்தலயாய சனசமூக நிலையத்திலும், 30 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேர் எபராவ விகாரையிலும், ரொட்டவெல பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களைச் சேர்ந்த 164 பேர் ரொட்டவெல சிங்கள வித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பதுளை பிரதேச செயலாளர் பிரிவில் குட்டியாகல பகுதியில் மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 கோபோ தமிழ் வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உலருணவு நிவாரணங்கள் மற்றும் ஏனைய உதவிகள் பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்கப்படுகின்றன.
கடும் மழையின் காரணமாக ஹாலிஎல ரொசட் தோட்டம், தொமோதரை உடுவரை தோட்டம், பதுளை வேவெஸ்ஸ, தெளிவத்தை தோட்டங்களும் நமுனுகுல பகுதியில் கனவரல்ல தோட்டமும், ஸ்பிரிங்வெலி தோட்டமும் அதிக அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளன.
மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகளும், மரங்கள் முறிந்து விழும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களின் கடும் பிரயத்தனத்தின் பின்னர் வாகனப் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
உடுவரை, தொமோதரை மற்றும் எல்ல ஆகிய ரயில் நிலையப் பகுதிகளில் புகையிரத கடவைகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவை நானுஓயாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.