சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் மூடப்பட்ட பல வீதிகள்!

முக்கிய செய்திகள் 2

நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து வெள்ளப்பெருக்கு காரணமாக ஊரணி பகுதியில் தடைப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு - வவுணதீவு வீதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வடமுனை – ஊத்துச்சேனை வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதுடன் அங்குப் படகு மூலமான போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பண்டாரவளையிலிருந்து பசறை செல்லும் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பசறை – நமுனுகுல 16ஆம் கட்டைப்பகுதியில் பாரிய மரங்களும் கற்பாறைகளும் சரிந்துள்ளமையை அடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் லபுகலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகக் குறித்த பகுதியில் ஒருவழி போக்குவரத்து இடம்பெறுகின்றது.

அத்துடன், கம்பளை - குறுந்துவத்தை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறுந்துவத்தை பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கம்பளை நகரிலிருந்து தொலஸ்பாகை நகருக்குச் செல்லும் பிரதான வீதியின் கடல்பொக்கு பகுதி தாழ் இறங்கியுள்ளது.

இதன் காரணமாக இன்று காலை முதல் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளப்பெருக்கு காரணமாக ஓமந்தை பகுதியில் தடைப்பட்டிருந்த ஏ9 வீதியூடான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.

Trending Posts