
மட்டக்களப்பு,மே 02
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதியாண்டு மாணவர் ஒருவர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையே அண்மையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து விரிவுரையாளர்கள் சிலர் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைநெறி நிறுவகத்தின் கட்டடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு மாணவர்களால் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் விரிவுரையாளர் ஒருவரால் மாணவர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
பின்னர் குறித்த பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்தமையை அடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டிருந்தனர்.
இந்தநிலையில் மாணவர்களை விடுதியிலிருந்து செல்லுமாறும் மறுஅறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்படுவதாகவும் நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் திங்கட்கிழமை காலை முதல் விடுதியின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாகவும் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நிர்வாகம் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெளியில் சென்ற மாணவர்கள் மீண்டும் விடுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் பதிலளித்த சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் புளோறன்ஸ் பாரதி கெனடி,
அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்துவதற்கு முகாமைத்துவ சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதுவரையில் மாணவர்களுக்கு இடையிலான அமைதியின்மை கட்டுப்படுத்துவதற்காக அவர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதிகளில் உள்ள மாணவர்கள் வெளியேறுவதற்கு இன்று காலை வரை காலஅவகாசம் வழங்கப்பட்டதாகவும் நிறுவகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
எனினும் விடுதியில் உள்ள மாணவர்கள் வெளியில் உள்ள மாணவர்களையும் தற்போது விடுதிக்கு அழைத்துள்ளதாகவும் அதனை தடுப்பதற்காக விடுதி நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.