பிரதமர் மக்களுக்கு பொய்களையே தெரிவிக்கின்றார்!

செய்திகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு பொய்களையே தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீன நாட்டிற்கு விற்பது குறித்து கடந்த காலங்களில் அதிகமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனால் கூட்டு எதிர்க்கட்சியினர் இவற்றிற்கு எதிராக போராட்டங்களை நடாத்தினார்கள்.

அதன் பின்னர் குறித்த துறைமுகம் விற்கப்படாது என்ற பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டன.

ஆயினும் பராக்கிரம திஸாநாயக்கவை துறைமுக அதிகாரிகளின் தலைவராக அரசாங்கம் நியமித்துள்ளது.

இதன் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவிற்கு விற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் 700 ஏக்கர்கள் நிலப்பரப்பினையே சீனாவிற்கு கொடுப்பதாக இருந்தது.

ஆனால் அது தற்போது 1100 ஏக்கர்களாக விற்கப்பட உள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவிற்கு ஒப்படைப்பதால் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பில் விரைவில் அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நாட்டின் தேசிய சொத்துக்களை விற்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.