இலக்கை விஞ்சி சாதனை படைத்தது சீனா!

உலகச் செய்திகள்

முதல் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி வீதத்தில் நிர்ணயித்த இலக்கையும் விஞ்சி சீனா சாதனை படைத்துள்ளது.

சீனாவின் உட்கட்டமைப்புத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு அதிகரித்து, ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளதால், நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதலாவது காலாண்டில் சீனப் பொருளாதாரம் 6.9 சதவீதம் என்ற ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டியுள்ளது. அதன்படி, முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.63 இலட்சம் கோடி டொலரை எட்டியுள்ளது.

இந்த பொருளாதார வளர்ச்சி என்பது, முழு ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவான 6.5 சதவீதத்தைக் காட்டிலும் அதிகம். அதேபோன்று, கடந்த 2016ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 6.8 சதவீதத்துடன் ஒப்பிடும்போதும் இது அதிகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் ஏற்றுமதி சரிவைக் கண்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், யுவான் கரன்ஸி மதிப்பு அடிப்படையில், ஏற்றுமதி கணிசமான ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளது. இரண்டாம் காலாண்டைப் பொறுத்தவரை, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி நிலையானதாகவும் வலிமையானதாகவும் இருக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.