எதிர்க்கட்சித் தலைவரைச் சாடினார் வடக்கு முதலமைச்சர்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கட்சித் தலைமை அடுத்த தேர்தலுக்குள் துரத்திவிடுமோ என்ற அச்சத்தில் பல கட்சித்தலைமைகளுக்கு விளம்பரப்படுத்த எதிர்க்கட்சி தலைவர் தவராசா தன்மீது தவறான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக முதலமைச்சர் வீ.வி.விக்னேஸ்வரன் சாடியுள்ளார்.

வடமாகாண சபையின் 102வது அமர்வு இன்றையதினம் பேரவையில் நடைபெற்ற போது, கடந்த அமர்வின் போது, வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சாடினார்.

அதன்போது, முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது, கட்சியைப் பற்றி கதைக்க வேண்டாம் நீ;ஙகள் எந்த கட்சியில் உள்ளீர்கள் என்பதனை தெரிவியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தினை பொருட்படுத்தாது முதலமைச்சர் தொர்ந்தும் உரையாற்றியதுடன், எதிர்கட்சி தலைவரின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் அண்மைக்காலங்களில் தன்னைப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கு எம்மைக் கையாலாகாதவர்கள் என்று சித்தரிக்கப்பார்க்கின்றார். தனது கட்சியில் வேண்டப்படாத ஒருவராக இருக்கும் அவர் பத்திரிகைகளில் தஞ்சம் புகுந்திருப்பது விளங்கக்கூடியதொன்றுதான். எமது கௌரவ அவைத்தலைவரின் சாதுரியத்தால் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை தக்கவைத்துக்கொண்டிருக்கும் அவர் கடந்த 45 மாதங்களில் நாங்கள் எதுவுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

ஒருவேளை அவர் அரசியலை விட்டு ஆத்மீகத்தினுள் நுழைந்துவிட்டாரோ என்று அப்பொழுது நினைத்துக்கொண்டேன். ஆத்மீகத்தில்த்தான் நாம் எதுவுமே செய்யவில்லை, இறைவன்தான் செய்விக்கின்றான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. ஆனால் அவரின் கேள்விகள் அந்த அர்த்தத்தில் எழுப்பப்படவில்லை.

சனி, ஞாயிறு பார்க்காமல் ஒவ்வொரு நாளும் 15 இலிருந்து 18மணித்தியாலம் வரை ஓயாது வேலை செய்துகொண்டிருக்கின்றோம். பலவற்றைச் செய்துமுள்ளோம். ஆனால் அவை தனது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமையவில்லை என்பது தான் அவரின் பிரச்சனை. அதனால்த்தான் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார். நாங்கள் பலதையும் செய்துள்ளோம். ஆனால் அவருக்கு அவற்றின் தாற்பரியமும் உண்மையும் தெரியாமல் செய்ததால் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பது அவரின் முறைப்பாடு. அவருக்குத் தெரியாமல் நடந்த பலவற்றின் உண்மை நிலையை எடுத்துக் கூறுகின்றேன்.

பாப்பாண்டவரின் பகர்வுகள் போல்ப் பலதையும் பத்திரிகைகள் ஊடாகப் பலரறியப் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்று கூறிக்கொள்கின்றேன். பத்திரிகையில் பெயர் வரவேண்டும் என்பது தான் உங்களின் குறிக்கோளாக உள்ளதே ஒளிய உண்மையைத் தெரிந்து கொள்வதல்ல. ஒருவேளை உங்கள் கட்சி உங்களை அடுத்த தேர்தலுக்கு முன் கட்சியில் இருந்து துரத்திவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் பல கட்சித்தலைமைகளுக்கும் உங்களை விளம்பரப்படுத்த இந்த ஏற்பாடோ என நினைக்கின்றேன் என்றார்.