முதலமைச்சரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தார் தவராசா

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 1

வடமாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக நான் கூறியிருந்த குற்றச்சாட்டுக்களுக்கு தர்க்க ரீதியாக பதிலளிக்க தெரியாமல் கத்தோலிக்க மக்களின் திருத்தந்தை பாப்பாண்டவர் போல் தான் ஊடகங்களுக்கு எல்லாவற்றையும் கொடுப்பதாக முதலமைச்சர் பாப்பாண்டவருடன் ஒப்பிட்டு பேசியமை மிக தவறானது என்பதுடன் மிக கண்டனத்திற்குரிய கருதாகவும் அமைந்திருப்பதாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் வட மாகாண சபையின் அமர்வில் தன்னால் 21.07.2017ம் திகதியன்று வட மாகாண சபையின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு விவாதத்தினை ஆரம்பித்து வைத்தபோது, சுட்டிக்காட்டப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பான விடயங்களுக்கான தர்க்கரீதியான பதிலளிக்காமல் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்காக தான் அவ்வாறு கூறுவதாகக் குறிப்பிட்டதுடன், அதற்கு உவமையாக பாப்பாண்டவரின் பகிர்வுகள் போல் பலதையும் பத்திரிகைகள் ஊடாகப் பகிர்ந்து கொள்வதாகக் குறிப்பிட்டதுடன், அவ்வாறு செய்வது நல்லதல்ல என்றும் தெரிவித்தார்.

தன்னை ஊடக விளம்பரத்திற்காகச் செயற்படுவதாக விடயத்தைத் திரிபுபடுத்த முயன்ற முதல்வர் எனது செயற்பாடுகளை கத்தோலிக்க மக்களின் திருத்தந்தை பாப்பாண்டவருடன் ஒப்பிட்டுப் பேசியது மட்டுமல்லாமல், அவ்வாறு செய்வது நல்லதல்ல என்று குறிப்பிட்டதன் மூலம் பாப்பாண்டவரின் செயற்பாடுகளை விமர்சனம் செய்வதாகவும் அமைகிறது என்றும் தவராசா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் இக்கூற்றுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தர்க்கத்தைத் தர்க்கத்தால் வெல்லுங்கள், நியாயத்தை நியாயயமான செயற்பாடுகள் மூலம் வெல்லுங்கள் என்று பல தடவைகள் மாகாண சபையில் கூறியுள்ளதாகவும், தர்க்கத்தை தர்க்கத்தால் வெல்ல முடியாத முதலமைச்சர் எனது செயற்பாடுகளிற்குப் புதிய காரணங்கள் கண்டுபிடித்ததுடன், அதனைப் பாப்பாண்டவரின் செயற்பாடுகளோடு, ஒப்பிட்டு விமர்சித்திருந்தமைக்காக கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பைப் கேட்டுக் கொள்வதாகவும் தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.