இஸ்ரேலிய படையின் துப்பாக்கிச் சூட்டிலேயே ஊடகவியலாளர் ஷ்ரீன் அபு அக்லே கொல்லப்பட்டிருக்கலாம்

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

பலஸ்தீன ஊடகவியலாளர் ஷ்ரீன் அபு அக்லே, இஸ்ரேலியப் படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தினாலேயே கொல்லப்பட்டிருப்பதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஷ்ரீன் அபு அக்லேவின் உடலை துளைத்த தோட்டாவை விசாரணைகளுக்காக, ஜெருஸலேத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் கடந்த சனிக்கிழமை பலஸ்தீன் கையளித்தது.
மேற்படி தோட்டாவை நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னர் அமெரிக்கா மேற்கண்டவாறு தெரிவித்தள்ளது.

இத்தோட்டா கடுமையாக சேதமடைந்துள்ளதால், இஸ்ரேலியப் படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்திலா அல்லது பலஸ்தீனர்களின் துப்பாக்கிப பிரயோகத்திலா  ஷ்ரீன் அபு அக்லே கொல்லப்பட்டார் என்பதை  உறுதியாக கூற முடியாது. ஆனால், இரு தரப்புகளிலிருந்தும் கண்டறியப்பட்ட விடயங்களின்படி, இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி; பிரயோகத்திலேயே அவர் கொல்லப்பட்டிருப்பதற்கான வாய்ப்புள்ளது என அமெரிக்காவை தீர்மானிக்கச் செய்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பலஸ்தீன அமெரிக்க ஊடகவியலாளரான ஷ்ரீன் அபு அக்லே (Shireen Abu Aqla), மேற்குக் கரை பிராந்தியத்தின் ஜெனின் நகர அகதிகள் முகாமுக்கு வெளியே, கடந்த மே 11 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இஸ்ரேலியப் படையினர் நடத்திய முற்றுகையொன்றில் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்தபோது அவர் கொல்லப்பட்டார்.

இஸ்ரேலிய படையினராலேயே அவர் கொல்லப்பட்டார் என பலஸ்தீன அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால், பலஸ்தீன துப்பாக்கிதாரியினால் அல்லது இஸ்ரேலிய படையினரால் தவறுதலாக சுடப்பட்டிருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர். ஷ்ரீன் அபு அக்லே, ‘PRESS’ என பொறிக்கப்பட்ட அங்கி மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்தார். தலைக்கவசத்தின் கீழ் அவரின் உடலில் தோட்டா தாக்கியிருந்தது.

Ruger Mini-14 rifle  துப்பாக்கியின் ஊடாக 5.56 மில்லிமீற்றர் தோட்டாவினால் அவர் சுடப்பட்டுள்ளார் என பலஸ்தீன விசாரணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பலஸ்தீன விசாரணை அறிக்கையை இஸ்ரேலிய அதிகாரிகள் நிராகரித்தனர். ஊடகவியலாளர்களை இஸ்ரேலிய படையினர் ஒருபோதும் இலக்கு வைப்பதில்லை என இஸ்ரேலிய பாதுகாப்பு அசைமச்ர் பென்னி கான்ட்ஸ் கூறியிருந்தார்.

இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் ஆயுதத்தை தான் அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் முன்னர் தெரிவித்திருந்தது. எனினும், மேற்படி தோட்டாவின் சேத நிலை காரணமாக அதை கூறமுடியாதுள்ளதாக நேற்று  திங்கட்கிழமை இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.