2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்தச் சட்ட மூலத்தை முன்வைக்க அமைச்சரவை அனுமதி

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கொழும்பு, ஜுலை 05

2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றில் முன் வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

வெளிநாட்டு செலாவணி வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் அதிகரித்தமையாலும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் பொதுவான வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்த முடியாது போயுள்ளது.

இதன்காரணமாக விவசாயம், போக்குவரத்து, கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டு மக்களுடைய வாழ்வு மோசமான நிலையை அடைந்துள்ளது.

இந்த நிலைமையின் கீழ் 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டை சமர்ப்பிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் 06ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், பொருளாதார உறுதிப்பாட்டுக்காக வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வரி மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய குறித்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு 2022ஆம் ஆண்டுக்கான 2021ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பாதீட்டு மதிப்பீட்டை திருத்தம் செய்வதற்கும், அதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணில்விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.