காணாமற்போனோர் விடயத்தில் சம்பந்தனின் கருத்து

சிறப்புச் செய்திகள் செய்திகள்

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை திருப்திகரமான முறையில் கவனம் செலுத்தப்படவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பலவந்தமாகக் காணாமல்போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்களது சர்வதேச தினம் நாளையாகும். அதனை முன்னிட்டு இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பலவந்தமாக அல்லது சுயவிருப்பத்திற்கு எதிராகக் காணாமல்போகச் செய்தலினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த நாட்டில் உள்ளதாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அவர்கள், அமைதி வழியில் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதன் உண்மைகளைக் கண்டறிய வேண்டுமென்றே அவர்கள் கோருகின்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்கள், பல வருடங்களாகத் தமது உறவுகள் பற்றிய உண்மை நிலையை அறிய முடியாதவர்களாகவும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவும் தொடர்ந்தும் இருந்துவரும் நிலைமை கவலை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.