சட்டவிரோத மண் அகழ்வால் நீர் வற்றும் நிலை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கிளிநொச்சி, வன்னேரிக் குளத்தின் பின் பகுதியில் தொடர்கின்ற மணல் அகழ்வின் காரணமாக குளத்தின் நீர் வேகமாக வற்றுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம் குடியேற்றத் திட்டத்தில் கிராமத்தின் உயிர்நாடியாகக் காணப்படும் நிலையில், முழுமையாக விவசாயத்தை நம்பியுள்ள இக்கிராமத்தில், 363 ஏக்கரில் ஆண்டு தோறும் பெரும்போகப் பயிர்ச்செய்கை இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு, கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளங்களின் வான் வெள்ளம், இக்குளத்தை நிரப்பும். வன்னேரிக்குளத்தில் இருந்து வெளியேறுகின்ற நீர் மண்டைக்கல்லாறு வழியாக பூநகரிக் கடலில் கலக்கின்றது. வன்னேரிக் குளத்தையும் தேவன்குளத்தையும் இணைத்து உருவாக்கப்படவுள்ள பெரும் நீர்த்தேக்கத்தின் மூலம், ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக வன்னேரிக்குளத்தின் பின்பகுதியில் பெருமளவில் மணல் அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக, குளத்தின் நீர் வேகமாக வற்றுகிறது. வன்னேரிக்குளத்தில் நடைபெறுகின்ற மணல் அகழ்வுகளுடன் கிராமத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.