இலங்கைக்கான வருகையை குறைத்துள்ள விமான சேவைகள்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கொழும்பு, ஓக 17

7 வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை ஒரு வாரத்தில் 108 இல் இருந்து 52 ஆக குறைத்துள்ளன.

எரிபொருள் நிரப்பும் வசதிகள் இல்லாமை மற்றும் வருமானம் ஈட்டுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாகவே இவ்வாறு விமான சேவைகளின் எண்ணிக்கையினை குறைத்துள்ளன.

குறிப்பாக 5 விமான சேவை நிறுவனங்கள் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும், 02 விமான நிறுவனங்கள் இலங்கைக்கு வருவதைக் கூட நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய Emirates, Qatar Airways, Etihad, Oman, Air India ஆகிய நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவை எண்ணிக்கையை குறைத்துள்ளதுடன், Saudi Air மற்றும் Kuwait Airways ஆகியவை இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

எமிரேட்ஸ் விமான நிறுவனங்கள் வாரத்திற்கு 26 விமானங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது 14 ஆகக் குறைத்துள்ளது.

அத்துடன், கட்டார் ஏர்வேஸ் முன்பு வாரத்திற்கு 35 விமானங்களை இயக்கியிருந்த நிலையில், தற்போது அது 31 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Etihad முன்பு வாரத்திற்கு 14 விமானங்களை இயக்கி வந்த நிலையில், தற்போது அதை 06 ஆகக் குறைத்துள்ளது.

ஓமன் ஏர்லைன்ஸ் முன்பு வாரத்திற்கு 11 விமானங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது அதை 07 ஆகக் குறைத்துள்ளது.

மேலும், ஏர் இந்தியா முன்பு வாரத்திற்கு 09 விமானங்களை இயக்கிய நிலையில், தேவை பலவீனமானதால் அதை 04 ஆக குறைத்துள்ளது.

மேலும், வாரத்திற்கு 07 விமானங்களை இயக்கிய சவுதி எயார் நிறுவனமும், வாரத்திற்கு 04 விமானங்களை இயக்கிய குவைத் எயார்வேஸ் நிறுவனமும் இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தியுள்ளன.

மாலத்தீவுகள், சலாம் ஏர்வேஸ், தாய் ஸ்மைல், விஸ்தாரா, சைனா சதர்ன் மற்றும் சுவிஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் நாட்டின் நிலைமை சீராகும் வரை இலங்கையுடனான தங்கள் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.