வித்தியாவுக்கு முழுமையான நீதி வேண்டும் – ஹர்த்தாலை வரவேற்கிறது ஈ.பி.டி.பியின் மகளிர் அணி

சிறப்புச் செய்திகள் செய்திகள்

புங்குடுதீவு மாணவி வித்தியாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்புக்குரியதென ஈ.பி.டி.பியின் மகளிர் அணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த தீர்ப்பு சமூக விரோதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், பெண்களுக்கு பாதுகாப்பையும் கொடுத்திருக்கின்றது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தாலும், குற்றவாளிகளுக்கு உதவியவர்களும், குற்றவாளிகள் தப்பிக்க துணைபோனவர்களும் நீதியின் தீர்ப்பை எதிர்கொள்ளவில்லை.

அத்தகையவர்களின் பதவிகளும், அரசியல் அதிகாரங்களும் நீதியின் தண்டனையிலிருந்து அவர்களை காப்பாற்றும் அரணாக இருந்துள்ளதா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழச் செய்துள்ளது. எனவே குற்றவாளிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் கல்விபோதிக்கும் போலிகள், போன்றவர்களும் தண்டிக்கப்பட்டு வித்தியாவுக்கான நீதி முழுமையானதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீவக மக்களும், யாழ். பெண்கள் அமைப்பினரும் முன்னெடுக்கவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் அணி தனது வரவேற்பை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய தினம் அனுஷ்டிக்கப்படும் பூரண ஹர்த்தாலானது இயல்பு வாழ்வுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமலும், பெண்கள் தமது உணர்வுகளை அமைதியாக வெளிப்படுத்தும் வகையிலும் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு எமது மகளிர் அணியினர் அனைத்து பங்களிப்புக்களையும் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயநல வியாபார அரசியல் நடத்தும் இவர்கள், பணத்துக்காக சமூக விரோதிகளை ஊக்குவிப்பதும், அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கச் செய்வதும், அரசாங்கத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தும் செயலாகவே அமைகின்றது. இவர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடைபெறும் சீர்கேடுகளை நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற போதிலும், சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற சமூக விரோதச் செயற்பாடுகளை நாம் கண்டுகொள்ளாமலும், கண்டிக்காமலும் இருக்க முடியாது என்பதுடன், பெண்கள் அமைப்புக்களின் ஹர்த்தாலானது குற்றவாளிகள் தப்பிக்க துணைபோன குற்றவாளிகளும் நீதியின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும் எனவும் ஈ.பி.டி.பியின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.