முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,செப் 23

முட்டையின் விலை 75 ரூபா வரையில் அதிகரிக்கப்படுமென தேசிய கால்நடை வளங்கள் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ. சிரில் தெரிவித்துள்ளார்.

சோளம் உள்ளிட்ட தீவனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அமைவாக முட்டையினை விற்பனை செய்து, தொழிற்துறை நடவடிக்கைகளை கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 48 ரூபாவாக அதிகரித்துள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், நிர்ணய விலைக்கு அமைவாக முட்டையினை விற்பனை செய்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய நிலையில், இறைச்சிக்காக முட்டை கோழிகளை விற்பனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, முட்டை உற்பத்தி குறைவடைந்து வரும் நிலையில், முட்டைக்கான தட்டுப்பாடு மற்றும் விலை ஆகியன அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோளத்தின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரிசியை தீவனமாக பயன்படுத்த முடியாத வகையில் வர்த்தக அமைச்சினால் வர்த்தமானி ஊடாக தடை விதிக்கபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் கருத்தில் கொண்டு கூட்டு முடிவுகள் எட்டப்படுவதே சிறந்ததாகும் எனவும் தேசிய கால்நடை வளங்கள் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ. சிரில் தெரிவித்துள்ளார்.