இன்று புரட்டாசி சனி விரதம் ஆரம்பம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ், செப்.24

புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிழமை அதிகாலையில் துயில் நீத்து,தூய நீராடி ஆசாரமாக சனிபகவானுக்கு எண்ணெய்சுட்டி, நீலமலர்மாலை என்பன சார்த்தி வழிபடுவர்.

சனீஸ்வரன் தானியம் எள், வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.

சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர்.