நடக்க முடியாத நிலையில் பாராளுமன்றம் செல்லும் தமிழ் எம்பிக்கள்: சம்பந்தனை சாடிய கருணா அம்மான்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கிளிநொச்சி, செப். 24: நடக்க முடியாத நிலையில் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்கிறார்கள். இவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு சேவை செய்யப் போகிறார்கள்? என சம்பந்தனை மறைமுகமாக சாடும் வகையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியுமான கருணா அம்மான் கருத்துதெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் " நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களை நடாளுமன்றத்துக்கு அனுப்பி வருகிறோம். எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தூக்கி சென்று பாராளுமன்றத்தில் அமர்த்த வேண்டிய நிலையில் உள்ளனர். நடக்க முடியாத நிலையில் உள்ள இவர்கள் இவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு சேவை செய்யப் போகிறார்கள்?

அரசியலை இளைஞர்கள் செய்ய வேண்டும். அதற்காகத்தான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து பயணிக்கின்றோம். இளைஞர்களை கவரும் வகையில், கருணா அம்மான் படையணி என புதிய இளைஞர் அணி ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

யுத்தத்தின் வலிகள், பாதிப்புக்கள் எனக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. நானும் எனது அண்ணன் ஒருவரை யுத்தத்தில் பறி கொடுத்துள்ளேன். அவ்வாறு நீங்களும் உறவுகளையும், அங்கங்களையும் இழந்து ம் மாறாத வடுக்களுடன் வாழ்கின்றீர்கள்.

தொடர்ந்தும் கடந்த காலங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை. அவற்றை விட்டுவிட்டு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

அகில இலங்கை ரீதியில், மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதனை நாங்கள் பாராட்டியாக வேண்டும். அவ்வாறு கல்வியில் நாம் இன்றும் பின்னால் செல்லவில்லை. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் எவ்வாறு முன்னுக்கு வரலாம் என்பது தொடர்பில் நாங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையானது இன்னும் 5 ஆண்டுகளிற்கு குறையப்போதில்லை. தவறான ஜனாதிபதி ஒருவரை நாங்கள் தெரிவு செய்தமையால் இன்று நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குள் சென்றுள்ளது. மாற்றங்களை உருவாக்கலாம் என்ற நோக்கில் நானும் பின்னால் நின்றேன்.

எவரது ஆலோசனைகளையும் கேட்காது பல முடிவுகளை தன்னிச்சையாக எடுத்ததன் விளைவினை இன்று நாங்கள் அனுபவிக்க வேண்டி உள்ளது. பசளைக்கு தடை விதித்தமையால் ஏற்பட்ட விவசாய உற்பத்தியின் பாதிப்ப பொருளாதாரத்தை சரிவடைய செய்தது.

அதனால் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பினை சந்தித்தார். தொடர்ந்து பல பொருட்களிற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் நாட்டின் பொருளாதாரம் படு வீழ்ச்சி அடைந்தது என்றார் அவர்.