பெருந்தோட்ட சிறுவர்களுக்கு புதிய போஷணை பிஸ்கட்

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சிறுவர்களின் மந்தப்போஷணையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய போஷணை பிஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா சினிசிட்டா அரங்கில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தேசிய அளவில் ஒப்பிடுகையில், பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர்களின் மந்த போசணை நிலை அதிகரித்துக் காணப்படுகின்றமையானது, சிறுவர்களின் சுகாதார நிலைக்கு ஆரோக்கிய தன்மை இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த கால ஆட்சியாளர்கள் இவற்றை கண்டு அமைதி காத்ததாகவும் ஆனால், தனது அமைச்சின் ஊடாக இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய போஷணை உணவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் பழனி திகாம்பரம், சிறுவர்களை எதிர்கால தலைவர்களாக மாற்ற வேண்டுமாயின் அவர்களின் போஷணை மற்றும் கல்வி தொடர்பில் அதிக கரிசனைகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் நலன்கருதி அவர்களை, லயத்து வீட்டிலிருந்து தனிவீட்டுக்கு மாற்ற தனது அமைச்சு மூலம் தனிவீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், அமைச்சின் நிதியின் ஊடாகவும் உலக வங்கி நிதி ஊடாகவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு