லாஸ் வேகாஸ் தாக்குதல் சூத்திரதாரி கொலை; மேலுமொருவரைத் தேடி பொலிசார் வலைவீச்சு

உலகச் செய்திகள் செய்திகள்

அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான ஸ்ரீபன் பட்டொக் பொலிஸாரால் கொல்லப்பட்ட நிலையில் அவரது தோழி மரிலவ் டன்லெய் என்பவரை பொலிஸார் தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடன இசை நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் திடீரென்று மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொலிஸ் தரப்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இதன் பிரதான குற்றவாளியான ஸ்ரீபன் பட்டொக் என்ற 64 வயதுடைய நபரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து இவரது தோழியான மரிலவ் டன்லெய் என்பவரை அமெரிக்க பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த பெண் 62 வயதுடைய ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும், இவர் 4 அடி 11 அங்குலமுடையவர் என்றும் 111 பவுண்ட் எடை உடையவர் எனவும் அமெரிக்க பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் இதுவும் ஒன்றெனத் தெரிவிக்கப்படுகிறது.