பஷில் இருக்கும் வரை மஹிந்தவுக்கு விடிவில்லை

பஷில் ராஜபக்ஷவை விரட்டிவிட்டால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்ல காலம் பிறக்குமென இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, சுதந்திரக் கட்சியின் அரசியல் இன்று சவால் மிக்கதாக அமைந்துள்ளது என்றும், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு தான் இதற்குக் காரணம். மைத்திரி அணியா மஹிந்த அணியா என்ற போட்டி நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதனால், சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்று அதற்கு எதிராகச் செயற்பட்டால் அவர்களுக்கு ஒருபோதும் அரசியல் எதிர்காலம் இருக்காது. அதற்கு வரலாறே சான்று என்றும் தெரிவித்துள்ளார்.

இப்போது நாங்கள் பிரிந்து நின்றாலும் தேர்தல் வரும்போது நாங்கள் ஒன்றிணைந்தே செயற்பட வேண்டும் என்றும், தனித் தனியாகப் போட்டியிட்டால் ஐக்கிய தேசிய கட்சியே நன்மையடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த அணியினர் புதுக் கட்சி ஒன்றை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கின்றனர். இது அவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கே ஆபத்தாக அமைந்து விடும் என்பதுடன், மஹிந்த அணியிலுள்ள சிலரின் அரசியல் இலாபத்துக்காக அவர்கள் மஹிந்தவைப் பலி கொடுக்கப் பார்க்கின்றனர் என்றும், மஹிந்த இல்லையென்றால் அரசியல் இல்லை என்ற நிலைதான் அவர்களுக்கு உள்ளதாகவும், அவர்கள் தான் கட்டாயப்படுத்தி மஹிந்தவை புதுக் கட்சியில் இணைத்து விடப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உண்மையில் சிலர் மஹிந்தவைப் பிழையாக வழிநடத்துவதாகவும், அவர்களில் முதன்மையானவர் பஷில் ராஜபக்ஷ எனவும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, பஷில் தொடர்ந்தும் மஹிந்தவுடன் இருந்தால் மஹிந்த என்ற ஒரு பாத்திரம் அரசியலில் இருந்து காணாமல் போய்விடும், பஷிலை விரட்டி விட்டால் அன்று தான் மஹிந்தவுக்கு நல்ல காலம் பிறக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு