பொன்னியின் செல்வன்: பழையாறை நகர் எப்பிடி இருக்கிறது?

செய்திகள் முக்கிய செய்திகள் 3

பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை, வானதி, செம்பியன் மாதேவி ஆகியோர் வசிக்கும் நகரமாக பழையாறை நகரம் காட்டப்படுகிறது. அந்தப் பழையாறை நகரம் எங்கே இருக்கிறது? இப்போது எப்படியிருக்கிறது?

பொன்னியின் செல்வன் நாவலில் தஞ்சாவூர், நாகப்பட்டனம், காஞ்சிபுரம், கடம்பூர், பழையாறை ஆகிய நகரங்கள் முக்கிய சம்பவங்கள் நடக்கும் நகரங்களாக வருகின்றன. இதில் தஞ்சைக்கு அடுத்தபடியாக கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறும் நகரமாக பழையாறை இருக்கிறது.

இந்த நாவலில் சுந்தரசோழ சக்கரவர்த்தி தஞ்சாவூரில் இருந்தாலும், அவரது மகளான குந்தவை, அவளுடைய தோழி வானதி, செம்பியன் மாதேவி ஆகியோர் வசிக்கும் நகரமாக பழையாறை நகரமே குறிப்பிடப்படுகிறது.

நாவலில் வந்தியத்தேவனும் குந்தவையும் முதன் முதலில் சந்திப்பது இந்த ஊரில்தான்.

ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய பழையாறையின் பல கோவில்கள் தற்போது சிதிலமடைந்து காணப்படுகின்றன

பழையாறை நகரம் சோழர்கள் காலத்திற்காக வெகுவாக அறியப்பட்டாலும் எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் நந்திவர்மன் காலகட்டத்திலிருந்தே முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இந்த பகுதி இருந்திருக்கிறது. நந்திவர்மன் காலத்தில் இரண்டாம் தலைநகரமாகவும் பல்லவ சாம்ராஜ்யத்தின் தெற்கு எல்லையாகவும் இந்த இடம் மாறியது.

பிற்காலச் சோழப் பேரரசை நிறுவிய விஜயாலய சோழன் பழையாறை நகரிலிருந்துதான் ஆட்சிசெய்தான். பிறகு பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையிலான போரில் பல்லவர்களுக்கு உதவியதால், தஞ்சாவூரும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் விஜயாலயச் சோழனுக்கு வழங்கப்பட்டன.

இருந்தபோதும் சோழ மன்னர்கள் பழையாறையிலிருந்து ஆட்சி செய்வதையே விரும்பினர். ஆனால், சுந்தர சோழனின் காலத்தில் சோழர்களின் தலைநகரம் பழையாறையில் இருந்து தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டது.

ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் இரண்டாம் தலைநகராக விளங்கிய இங்கு பல கோவில்கள் கட்டப்பட்டன. ராஜராஜசோழன் மன்னனாக இருந்தபோது, அவரது மகன் ராஜேந்திரச் சோழன் அரசப் பிரதிநிதியாக பழையாறையில்தான் வசித்துவந்தான். அப்போதுதான் இந்தப் பகுதி அவனுடைய பெயராலேயே முடிகொண்ட சோழபுரம் எனக் குறிப்பிடப்பட்டது.

இரண்டாம் ராஜராஜ சோழன் தம் ஆட்சிக் காலத்தில் பழையாறையை மறுபடியும் சோழ நாட்டின் முதல் தலைநகரமாக மாற்றினான். அந்த காலத்தில் ராஜராஜபுரம் என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டது. இந்த மன்னன் கட்டிய ராஜராஜேஸ்வரம் என்னும் கோவில்தான் தற்போது தாராசுரம் கோவில் என அழைக்கப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலும் இதுவே தலைநகராக இருந்தது.

மூன்றாம் ராஜராஜன் ஆட்சிக் காலத்தில் பிற்காலப் பாண்டியர்கள் தலையெடுத்தனர். பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியன் சோழநாட்டை வென்று பழையாறையில் உள்ள மண்டபம் ஒன்றில் வீராபிஷேகம் செய்துகொண்டான். அதற்குப் பிறகு வந்த பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இந்த நகரம் கைவிடப்பட்டது. அதன் பிந்தைய வரலாறுகளில் பழையாறை பற்றிய குறிப்புகள் இல்லை.

இதற்குப் பிறகு இந்தப் பகுதி சிறு சிறு கிராமங்களாக சிதறிப் போனது.

சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் இந்த ஊர் குறிப்பிடப்படுகிறது. "தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து, பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை" என்கிறார் சேக்கிழார்.

நிலவியல் ரீதியில் பார்த்தால், அரசிலாற்றுக்கும் முடிகொண்டான் ஆற்றுக்கும் இடையில் ஐந்து மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்ட பகுதிதான் பழையாறை.

பொன்னியின் செல்வன் படத்தில் 'ஈழ நாடு' என்பது 'இலங்கை' என வருவது சரியா?
சோழர் காலத்தில் பழையாறை மகத்தான சிறப்புகளைப் பெற்ற ஒரு நகரமாக இருந்தாலும் தற்போது கீழப்பழையாறை, பழையாறை, வடதளி, தென்தளி, திருமேற்றளி, பட்டீச்சரம், சோழன் மாளிகை, தாராசுரம், திருச்சத்தி முற்றம், அரிச்சந்திரம், பாற்குளம், முழையூர், ராமநாதன் கோவில், ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், நாதன் கோவில், உடையாளுர் போன்ற சிறு சிறு ஊர்களாக இந்தப் பகுதி பிரிந்து காணப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து சுமார் 7-8 கி.மீ. தென் மேற்கு திசையில் இந்தப் பகுதிகள் அமைந்திருக்கின்றன.

இந்தப் பழையாறை பகுதியில் மட்டும் 19 மிகப் பெரிய கோவில்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது வெகு சில கோவில்களே காணக்கிடைக்கின்றன. சில கோவில்களின் கோபுரங்கள் சிதிலமைடந்து காணப்படுகின்றன.

இந்த ஊரில் உள்ள சோழன் மாளிகை என்ற பகுதியே, சோழர்களின் அரண்மனை இருந்த பகுதியாக சொல்லப்படுகிறது. இந்த ஊர் இருந்த இடத்தில்தான் அந்தக் காலத்தில் சோழர்களுடைய மாளிகை இருந்திருக்க வேண்டுமென பலரும் கருதுகிறார்கள். ஆனால், அந்த ஊரில் எந்த இடத்தில் அந்த மாளிகை இருந்திருக்க வேண்டும் என்பது தற்போது அங்கு வசிப்பவர்களுக்குத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது இந்த ஊரில் உள்ள குளத்திற்கு மேற்கே உள்ள தென்னந்தோப்பு இருக்கும் இடத்தில்தான் சோழர்களின் மாளிகை இருந்ததாகவும் தற்போது அங்கு தோண்டினாலும் கட்டடத் தொகுதிகளைப் பார்க்க முடியும் என்றும் வேறு சிலர் சொல்கின்றனர்.

இந்தப் பழையாறைப் பகுதியில் உள்ள திருமேற்றளியில் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று சிதிலமைடந்த நிலையில் காணப்படுகிறது. சோழர்கள் காலத்தில் பெரும்பாலான கோவில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்ட நிலையில், வெகு சில கோவில்கள் செங்கல் கட்டுமானங்களாகவே நின்றுவிட்டன. அப்படி நின்றுவிட்ட கோவில்களில் வெகு சில கோவில்களே எஞ்சியிருக்கின்றன. அப்படி எஞ்சியிருக்கும் கோவில்களில் இதுவும் ஒன்று.

சோழர் காலத்திற்குப் பிறகு வந்த பாண்டியர்கள் இந்தப் பகுதியில் இருந்த அரண்மனைகளை அழித்து, சூறையாடியதாகச் சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு இந்தப் பகுதியிருந்த மக்கள் வெளியேறிய நிலையில், சிறு சிறு கிராமங்களாக இந்தப் பகுதி மாறத் துவங்கியது. பிற்காலத்தில் வந்த நாயக்க மன்னர்கள் இங்குள்ள கோவில்களை மட்டும் புதுப்பித்தனர்.

ஒரு காலத்தில் கடல் கடந்த ஒரு சாம்ராஜ்யத்தின் இரண்டாம் தலைநகரமாக விளங்கிய இந்தப் பிரதேசம் தற்போது, தனது பழம் பெருமையின் எந்த அடையாளமும் இன்றி அமைதியாகக் காட்சியளிக்கிறது.

நன்றி- பிபிசி.