நெடுங்கேணி பஸ் நிலையம் தொடர்பில் மக்கள் விசனம்

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக சுமார் 25 மில்லியன் ரூபா செலவில் கடந்த 07 வருடங்களுக்கு முன்னர் பஸ் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்ட போதிலும், குறித்த பஸ் நிலையத்தில் பஸ்கள் தரித்து நிற்பதில்லையென மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பஸ் நிலைய கட்டிடத் தொகுதியில் சுமார் 20 கடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், கடையொன்றுக்கு மாதாந்தம் 1750 ரூபாவை பிரதேச சபைக்கு வாடகையாக செலுத்த வேண்டியுள்ள போதிலும், பஸ்கள் வருகை தராதமையினால் தமது வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது கடைகளை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் நெடுங்கேணி நகர மத்தியிலுள்ள தரிப்பிடத்தில் பஸ்கள் நின்று செல்வதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, 195 மில்லியன் ரூபா செலவில் திறந்து வைக்கப்பட்ட வவுனியா புதிய பஸ் நிலையமும் இன்று வரை பயன்பாடின்றிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி வவுனியா புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு, இரண்டு சேவைகளும் ஒரே பஸ் நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேர அட்டவணை முறையாக இல்லாமையால் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் தீர்வு எட்டப்படாத நிலையே காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு