பாராளுமன்றத்தை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று பிற்பகல் இடம்பெற்ற விஷேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதுடன், பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் உதவியை அதற்காக எதிர்பார்ப்பதாகவும், தனியொருவரிடமுள்ள அதிகாரம் கூட்டாண்மை முறைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால் அந்த நியாய தர்மங்களுக்குள் செயற்பட்டு நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டவாக்கம், நிறைவேற்றதிகாரம் மற்றும் நீதித்துறை பிரச்சினைகள் எழாத வண்ணம் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், மக்களின் இறைமையைப் பலப்படுத்தும் தலைமை நிறுவனம் என்ற வகையில் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டவாக்க அதிகாரத்தை ஒருபோதும் எவரும் சவாலுக்குட்படுத்த முடியாத வகையில் பேண வேண்டியதன் அவசியத்தையும், நிறைவேற்றதிகார முறைமைக்குள் ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை பலப்படுத்தி சட்ட ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் போது நீதித்துறை சுயாதீனமாகவும் பக்கசார்பின்றியும் செயற்படுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சபையில் உரையாற்றியிருந்த அதேவேளை, சார்க் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள், பிரதி சபாநாயகர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்களும் சபையில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.