மூன்றாம் நாட்டிற்கு அனுப்பப்படவுள்ள மியன்மார் அகதிகள்

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் மியன்மார் அகதிகள் விரைவில் மூன்றாம் நாடு ஒன்றுக்கு அனுப்பப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையை பொறுத்தவரை 1951ஆம் ஆண்டு அகதிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. எனவே, குறித்த உடன்படிக்கையின்கீழ் இலங்கையால் உடன்படிக்கையின் எந்தப்பொறுப்பையும் ஏற்கமுடியாது என்ற போதிலும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டியுள்ளதாக துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

2008, 2012 மற்றும் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு வந்த அகதிகள், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நிரந்தர குடியுரிமை போன்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பேரவையின் தலையீட்டில் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குறித்த நாடுகளும் அகதிகளுக்கு வதிவிடங்களை வழங்க முன்வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் மியன்மாரில் இருந்து இலங்கைக்கு வந்த அகதிகள், நேரடியாக இலங்கைக்கு வரவில்லை என்பதுடன், தென்னிந்தியாவில் இருந்து தப்பிச்செல்லும் வழியில் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும்போதே அவர்கள் கைது செய்யப்பட்டு, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரத்திடம் கையளிக்கப்பட்டனர்.

அவர்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் நிறுவனத்துடன் உடன்படிக்கையை செய்து கொள்ளவில்லை. எனவே குறித்த அகதிகளுக்கான முழு உதவிகளையும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகமே செய்துவருவதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு