முக்கொம்பன் வழியாக மணற்கொள்ளை

பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களையும்மீறி முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக முக்கொம்பன் மக்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கொம்பன் கிராமத்திலிருந்து 10ஆம் கட்டை வரை கொங்கிறீட் பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வழியாக நாள்தோறும் இருபதுக்கு மேற்பட்ட மணல் டிப்பர் வாகனங்கள் பயணிப்பதன் காரணமாக கொங்கிறீட் வீதி சேதமடைவதாக பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் இணைத் தலைவர்களிடமும், அதிகாரிகளிடமும் கிராம மக்கள் சார்பாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இனிமேல் மணலுடன் டிப்பர் வாகனங்கள் பயணிக்காதென உறுதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஓராண்டு கடந்து தற்போதும் மணல் டிப்பர்கள் தமது கிராமம் வழியாகவே பயணிக்கின்றன. அக்கராயனுக்கும் தமது கிராமத்திற்கும் இடையிலான நான்கு கிலோமீற்றர் வீதி பெரும் குன்றும்குழியுமாக மாறியுள்ள நிலையில் குறித்த கொங்கிறீட் பாதையையாவது காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளதென கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்வதற்கே இந்த வீதி பயன்படுத்தப்படுவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளருக்கும் பூநகரி பிரதேச செயலாளருக்கும் தகவல் வழங்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

குடமுருட்டி, கண்ணகைபுரம், அக்கராயன் ஆற்றுப் பகுதிகளில் சட்டவிரோதமாக அகழப்படும் மணலே இந்த வீதி வழியாக கொண்டு செல்லப்படுகின்றது. இதற்கு அக்கராயன், பூநகரி ஆகிய பொலிசாரின் ஆதரவும் காணப்படுவதாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிராம மக்களாகிய நாம் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் முக்கொம்பன் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு