ஜனநாயகம், சமத்துவத்தை ஏற்படுத்தும் புதிய அரசமைப்பிற்கு ஆதரவு – ஜே.வி.பி

தற்போதுள்ள அரசியலமைப்பினை மாற்றி மக்களுக்கு ஜனநாயகத்தினையும், சமத்துவத்தினையும் ஏற்படுத்தக் கூடிய புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு அளிக்குமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

யாழிற்கு வருகை தந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா யாழ். புங்கன்குளம் பகுதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.

அந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இன்றுள்ள அரசியலமைப்பை மாற்றி மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் கிடைக்கக்கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்பதே மக்கள் விடுதலை முன்னணியின் உறுதியான நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய முதலாளித்துவ அரசின் கீழ் புதிய அரசியலமைப்பு வருவதன் ஊடாக அனைத்து பிரச்சினைக்கும் தீர்;வு கிடைக்குமென நம்பவில்லை. இருந்தும், மக்களுக்கு ஏதாவது உரிமைகள் கிடைக்குமாக இருந்தால், கிடைக்கும் உரிமைகளுக்காக போராட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் அதற்காக செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள ரில்வின் சில்வா, அரசியலமைப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திட்ட வரைபு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது இறுதி முடிவல்ல. இவ்வாறான சூழ்நிலையில் தான் ராஜபக்ஷ இனவாத கும்பல் நாடு பிரிக்கப்படப் போகின்றதென பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், அரசு பௌத்த மதத்திற்கு இருக்கின்ற இடத்தினை மாற்றப் போவதில்லை. ஏனைய மதங்களுக்கு வழங்கும் உரிமைகளை நிறுத்தப் போவதுமில்லையென கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஓற்றையாட்சியா, பிரிக்கப்படாத நாடா என்ற கருத்தாடல்கள் நடைபெறுகின்ற போதிலும், இது தொடர்பாக இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும், பாராளுமன்றத்தில் பேசப்பட்டு விவாதிக்கப்பட்ட முதலாவது அரசியலமைப்பு இதுவே ஆகும். நாட்டிற்கான அரசியலமைப்பு என்பதன் காரணமாக இனவாதமல்லாத அனைத்து மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தக் கூடிய பொது நிலைப்பாட்டிற்கு அனைத்துக் கட்சிகளும், பொது அமைப்புக்களும் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசு கூறும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு பேசுவது முக்கியமானதல்ல. மக்களுக்கு எந்த வகையில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பது என்பது விசேட தேவையாக உள்ளதாகவும், மக்களுக்கான ஜனநாயகத்தினையும் சமத்துவத்தினையும் வென்றெடுப்பதற்கு ஏற்ற நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உட்பட அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள புதிய அரசியலமைப்பில் 03 விடயங்கள் ஆராயப்படுகின்றன. நிறைவேற்று அதிகார முறைகொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது, புதிய தேர்தல் முறைமை கொண்டு வருவது, மற்றும் அதிகார பரவலாக்கம், உட்பட விஷேடமாக வடபகுதியில் வாழும் தமிழர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதென்பது தொடர்பிலும் பேசப்படுவதாகவும், புதிய தேர்தல் முறைமை பற்றிய விவாதங்கள் இடம்பெறவில்லை. அவை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார முறைமையினை அகற்றுவது தொடர்பாக மைத்திரிபால அணியினர் இன்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு எதிராக நீக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், மக்களுக்கு உரிமை வழங்குவது தொடர்பிலும், மனித உரிமைகள் தொடர்பிலும், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று அரிய சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. ஜனநாயக ரீதியான உரிமைகளை நிலைநாட்டிக்கொள்வதற்கு ஏதுவான சூழ்நிலையில், புதிய திருத்தங்கள் உள்வாங்கப்படுமாக இருந்தால், அவை சிறந்தவை. அவற்றினை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்வதாகவும், இனவாத அடிப்படையில் கருத்துக்களை முன்வைத்து வடக்கிலும், தெற்கிலும், இனவாத சக்திகள் மூலம் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் கருத்துக்கள் மூலமாக இன்று மக்களுக்கு கிடைக்கக் கூடிய ஜனநாயக உரிமைகளுக்கு அதிகமாக உரிமைகள் கிடைக்குமாக இருந்தும், அவற்றிற்கு தடை ஏற்படுமாக இருந்தாலும், அந்த தடையை நிவர்த்தி செய்துகொண்டு மக்களுக்கு உரிமைகள் கிடைக்கக் கூடிய புதிய அரசியலமைப்புக்கு மக்கள் விடுதலை முன்னணி பூரணமான ஆதரவு வழங்கும் எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு