புதிய அரசியலமைப்பிற்கு பின்லாந்தின் அனுபவங்களைப்பெறத் தீர்மானம்

எமது புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அரசமைப்புத் திருத்தம் தொடர்பான அனுபவங்களையும் எமக்குப் பெற்றுக் கொள்ள முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பின்லாந்தின் பிரதமர் யுஹா சிபிலாவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பின்லாந்து சுதந்திரம் பெற்று 100 வருடங்கள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பின்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டமை இரு நாடுகளுக்குமிடயிலான நட்புறவை வளர்க்கும், பலப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையென பின்லாந்து பிரதமர் யுஹா சிபிலா தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பின்லாந்துக்கிடையே இருதரப்புக் கலந்துரையாடல்கள், ஹெல்சின்கி நகர ‘கெஸரன்தா’ பிரதமர் உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்த நிலையில், பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதன் பின்னர், இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கம் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக மறுசீரமைப்புக்களையும் பின்லாந்தின் பிரதமர் பாராட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, டிஜிட்டல் மயமாக்கல், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் போன்ற பல துறைகள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அரசமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக பின்லாந்தின் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாகவும், உலகின் முன்னேற்றகரமான கல்வி முறைமைகளை செயற்படுத்தும் பின்லாந்து உலகின் புதிய போக்குகளுக்கேற்ப எப்போதும் கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்வதாக பின்லாந்து பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

பின்லாந்தின் எரிசக்தி உற்பத்தித் தொழிநுட்பத்தை இலங்கைக்கு வழங்குவது தொடர்பாகவும், இலங்கையில் பல்வேறுபட்ட கருத்திட்டங்களை செயற்படுத்த கொடைகள் மற்றும் மானிய வட்டி வீதங்களில் கடன் உதவிகளை வழங்க இணங்கியமை குறித்தும் விக்கிரமசிங்க, யுஹா சிபிலாவுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு