வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக யாழ். வடமராட்சி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி, கட்டைக்காடு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி தெப்பமொன்று நேற்று சேதமாக்கப்பட்டுள்ளதுடன், மீனவர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கடலட்டை பிடிக்கச் சென்ற மன்னார் மீனவர்களே கட்டைக்காடு மீனவர்களின் படகு இயந்திரங்களை சேதப்படுத்தியுள்ளனர். இதன்போது மன்னார் மீனவர்களின் இரண்டு படகுகளையும், அவர்களால் பிடிக்கப்பட்ட கடலட்டைகளையும் கட்டைக்காடு மீனவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வடமராட்சி மீனவர் சங்கத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மன்னார் மீனவர் சங்கத்துடன் கலந்துரையாடல் நடைபெற்றதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த மீனவருக்கு 50,000 ரூபா நஷ்டஈட்டை வழங்குவதாகவும், சேதமடைந்த படகு இயந்திரங்களை பெற்றுக் கொடுப்பதாகவும் மன்னார் மீனவர்கள் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வடமராட்சி மீனவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.