ஜனாதிபதியை வீழ்த்துவோம் – ஜே.வி.பி

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தார்மீக உரிமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடையாதென மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக, அடுத்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்தியமை போன்று, இவரையும் வீழ்த்துவோமென எச்சரித்துள்ளார்.

இதனிடையே, கட்சியின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன், நிறைவேற்று அதிகாரமுறை தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரினார்.

இன்னொரு ஜனாதிபதித் தேர்தல் இருக்காதென, ஜனாதிபதி சிறிசேன தெரிவித்ததுடன், வண. சோபித தேரரின் இறுதிக் கிரியையின் போது, அவர் அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவாகவும் இருக்கலாம், ஜனாதிபதி சிறிசேன, இன்னொரு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தார்மீக உரிமையைக் கொண்டிருக்கவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை, அவர் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பிலான 09 திருத்தங்களை, ஜே.வி.பி வழங்கியுள்ளதாகவும், அரசமைப்பின் வரைவுச் சட்டமூலம், முரண்பாடான பார்வைகளை உள்ளடக்கி இருக்காது. அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களையே அது கொண்டிருக்கும் எனவும், மக்கள் விடுதலை முன்னணியாக தாம், இந்த நாட்டைப் பிரிப்பதற்கு எவருக்கும் அனுமதிக்கமாட்டோமென மக்களுக்கு உறுதி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு