நாளை முதல் மீண்டும் வேலைநிறுத்தம்

ரயில்வே நடவடிக்கைகள் மேற்பார்வைச் சங்கமும் இலங்கை ரயில்வே காப்பாளர்கள் சங்கமும், காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டமொன்றை நாளை நள்ளிரவு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரித்துள்ளன.

அவர்களது சம்பள உயர்வு தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லையெனத் தெரிவித்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ரயில்வே நடவடிக்கைகள் மேற்பார்வைச் சங்கத்தின் ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன, சம்பளங்களை உயர்த்துவது தொடர்பாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட பணிப்புரைகளை, தேசிய ஊதிய மற்றும் பதவியணிகள் ஆணைக்குழு பின்பற்றவில்லையென குற்றஞ்சாட்டினார்.

6/2006 என்ற சுற்றறிக்கைக்கு அமைவாக, எம்.பி1, எம்.பி2 தர ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்குமாறு, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்திருந்ததாகவும், முன்னைய வேலைநிறுத்தத்தின் போது, எம்.பி1, எம்.பி2 தரத்திலுள்ள இயந்திரச் சாரதிகள், காவலர்கள், ரயில் நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோரின் ஊதியத்தை உயர்த்துமாறு, ரயில்வே திணைக்களத்தை தாங்கள் கோரியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் 20ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கும் வரையில், ஒரு மாதகாலத்துக்குள் ஊதிய உயர்வை வழங்குமாறு, பதவியணி ஆணைக்குழுவிடம் கோரப்பட்டிருந்தது. அதற்கான ஒரு மாத காலக்கெடு, நாளையுடன் நிறைவடைகிறது. பதவியணி ஆணைக்குழுவால் இதுவரை எடுக்கப்பட்ட ஒரே முடிவாக, அவர்கள் நியமிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளத்தைவிடக் குறைவான சம்பளத்தைக் கொண்ட ஊதிய தரத்துக்கு அவர்கள் நியமித்தமைதான் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதே வழியென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு