சைட்டத்தை மூடப்போவதில்லை – அரசாங்கம் திட்டவட்ட அறிவிப்பு

மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகத்தை (சைட்டம்) ஒருபோதும் மூடிவிடப் போவதில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று முற்பகல் ஆரம்பமான போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

சபையில் கேள்வியெழுப்பிய தினேஷ் எம்.பி, சைட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் போக்கு, மிக மோசமாக உள்ளதாகத் தெரிவித்ததுடன், இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதற்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரினார்.

அவரது கேள்விக்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, சைட்டம் தொடர்பான வர்த்தமானி, முன்னைய அரசாங்கத்தின் காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. அதனை நீங்கள் தான், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளீர்கள். அதற்கான ஆவணங்கள் இங்கே இருக்கின்றன. இப்போது எங்களைக் குற்றஞ்சுமத்துகிறீர்கள் எனக் கேள்வியெழுப்பினார்.

சைட்டம் நிறுவனத்தை, ஒருபோதும் மூடிவிடமாட்டோம் என்பதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புவதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவிப்பார் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த போது சபையில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு