எரிபொருள் பிரச்சினைக்கு அமைச்சரவையால் குழு நியமனம்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து உடனடித் தீர்வை வழங்கும் வகையில், நால்வர் அடங்கிய குழுவொன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவில், பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, விஷேட வேலைத்திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு உடனடித் தீர்வு கண்டு, விரைவில் நாட்டுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக, இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ள கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று எரிபொருள் கப்பல் ஒன்று நாட்டுக்கு வருகை தருகின்ற போதிலும், குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடு நிலவுகின்றது என்ற சந்தேகத்தில் வாகன உரிமையாளர் மேலதிகமாக எரிபொருளைக் கொள்வனவு செய்வதால், எரிபொருள் தட்டுப்பாடு இரட்டிப்பாகியுள்ளதாகவும், 10 லீற்றர் எரிபொருள் கொள்வனவு செய்த நபரொருவர், தற்போது ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினையின் காரணமாக 30 – 40 லீற்றர் எரிபொருளைக் கொள்வனவு செய்வதாகவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தரம் குறைந்த எரிபொருளை நிராகரித்தமை, எரிபொருள் கப்பல் தாமதமடைந்தமை ஆகியன காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், தரமற்ற எரிபொருளை நிராகரித்தமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, அக்கப்பலை, திருகோணமலை துறைமுகத்தில் தரித்து வைத்திருப்பதானது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு