கூட்டமைப்பிற்குள் வலுக்கும் முரண்பாடுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே கருத்து முரண்பாடு வலுப்பெற்றுவரும் நிலையில், தமிழ் அரசியல் பிரதிநிதிகளை நேரில் அழைத்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கலந்துரையாடியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து உத்தியோகப்பூர்வமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்த போதிலும், பின்னர் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பின் அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிப்பதாக அண்மைக்காலமாக பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கு முதலமைச்சர் விக்னேஷ்வரன் நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் தமிழரசுக் கட்சி தமது அதிகாரத்தை நிரூபிக்கும் வகையில் பல செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது. அதன் உச்சகட்டமாக முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் குறிப்பிட முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமைக்கு தமிழரசுக் கட்சியும் ஒரு காரணமென கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன.

தமிழரசுக் கட்சியின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக எதிர்வரும் தேர்தல்களில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப்போவதில்லையென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்வதற்கான உரிமை அக்கட்சிக்கு உள்ளதென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறலாமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் ஊடகங்கள் மூலம் அறிவித்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தற்போது ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால், கூட்டமைப்பின் ஒற்றுமை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு