இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவோம்

இலங்கையின் தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு தென்னாபிரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்குமென இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஆர்.பி.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் நேற்று ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நல்லிணக்கம் தொடர்பான எமது சொந்த அனுபவங்களையும் அவற்றினூடாக பெறப்பட்ட முன்னேற்றகரமான பெறுபேறுகளையும் இலங்கையுடன் பகிர்ந்து கொண்டு, நிலையான அமைதி ஏற்படுவதற்கு தன்னாலான உதவிகளை வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் கல்வி, மீன்பிடி, சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் தென்னாபிரிக்காவின் பங்களிப்பையும் முதலீட்டையும் மேற்கொள்ள முடியும் என்றும், சகல வளங்களையும் கொண்டுள்ள கிழக்கு மாகாணம், இலங்கையின் உயர் பொருளாதார வளர்ச்சியுடைய மாகாணமாகத் திகழும் என்பதில் தனக்குப் பூரண நம்பிக்கையுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர், புதிய அரசமைப்பு, பல முன்னேற்றகரமான அம்சங்களைக் கொண்டிருப்பதுடன், மக்களின் சமூக, பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதாக அமையுமென எதிர்பார்ப்பதுடன், நல்லிணக்க முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு, சமூக பொருளாதார முன்னேற்றம் முக்கிய பங்காற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு