யாழில் 10,000 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக சுமார் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

2,727 குடும்பங்களை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி தெரிவித்துள்ளதுடன், அவர்களில் 456 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடைத்தங்கல் முகாம்களிலும், நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடும்மழை காரணமாக சுமார் 42 வீடுகள் முழுமையாகவும் 172 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும், நல்லூர், பருத்தித்துறை, கோப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் பிரதேச செயலகங்களூடாக விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பகுதியில் நிலவிய கடும் மழைக் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளமையால் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிக்குட்பட்ட இத்தாவில் கிராமத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழையினால் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 03 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு