மதுபானசாலைகளுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் (Photos)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளைக் குறைக்கக் கோரியும் ஆரையம்பதியிலுள்ள மதுபானசாலைகளை அகற்றக் கோரியும் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மற்றும் மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு, யுத்தத்துக்குப் பின்னர் மட்டக்களப்பில் அதிகளவான மதுபானசாலைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவற்றை மட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

ஆரையம்பதியில் இரண்டு மதுபானசாலைகள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வருவதாகவும் அதற்கு எதிராக 2015ஆம் ஆண்டிலிருந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும், அதனையும் மீறி, சில அதிகாரிகளின் அனுசரணையுடன், அந்த மதுபானசாலைகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு, குறித்த மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படக்கூடாதென தெரிவிக்கப்பட்டதுடன், அதனையும்மீறி அனுமதி வழங்கப்பட்டால், தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மதுபாவனைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுவருவதுடன், வறுமைநிலை, குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளது எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கவனயீர்ப்பைத் தொடர்ந்து மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயத்திடம் மகஜரென்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு