நல்லாட்சி அரசாங்கம் நடிக்கிறது – புலம்புகிறார் சிவசக்தி ஆனந்தன்

அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக வெளித்தோற்றத்தில் தமிழ் மக்களுக்கு உதவுவதுபோல் நடிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இந்த வரவு – செலவுத் திட்டத்தில் சலுகைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகின்ற போதிலும், அரசமைப்பின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையைப் போல, தெளிவில்லாமல் உள்ளதாகவும், வடக்குக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட, முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும்கூட, அவை, வெறும் காகிதங்களாக அல்லது வெறும் பெயர்ப்பலகைகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்துவிடக் கூடிய நிலையே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று எமது மக்கள், எத்தனையோ பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்குமாறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கு உரிய தீர்வு இந்த நல்லாட்சியில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான், ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்த போதிலும், அது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது கரிசனை காட்டுவது போல் நடிக்கும் அரசாங்கம், மக்கள் எதிர்நோக்கியிருக்கும் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதில் பின்னிற்பதாகவும், பலவீனமான தேசிய இனமொன்றை, பலம்மிக்க மற்றுமொரு தேசிய இனம், தமது பலத்தைப் பயன்படுத்தி அடக்குவதற்கு முயலுமானால், தர்மம் அதற்கு இடம்கொடுக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் இக்கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று முன்தினம் தெரிவித்த கருத்துக்கு எதிரானதாகக் காணப்படுகிறது. அக்கருத்தில் அவர், வரவு – செலவுத் திட்டத்தில், கூட்டமைப்பின் கருத்துகள் உள்வாங்கப்பட்டதாகத் தெரிவித்ததுடன், வரவு – செலவுத் திட்டம் குறித்து, திருப்தியான மனநிலையையே வெளிப்படுத்தியிருந்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு