சிம்பாப்வேயில் ஆட்சியைக் கைப்பற்றியது இராணுவம்

ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

1980ஆம் ஆண்டு முதல் அதிபராக இருக்கும் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்துவரும் நிலையில், அதிகாரத்தை தனது வசம் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறி அந்நாட்டு துணை அதிபர் எமர்சன் நாங்காவாவை கடந்த வாரம் முகாபே பதவி நீக்கம் செய்தமையால், ஆளும் ஷானு – பி.எஃப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டமையால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை தலைநகர் ஹரரேவை இராணுவப் பீரங்கிகள் சுற்றிவளைத்தன. அதிகளவிலான இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டு, அந்நாட்டு அரச ஊடகத் தலைமையகத்தையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

பாராளுமன்றம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களையும் படிப்படியாக இராணுவம் முற்றுகையிட்டு, தன்வசம் கொண்டு வந்தது. அதிபர் மாளிகையை எப்போது வேண்டுமானாலும் இராணுவம் முற்றுகையிடலாம் என்ற நிலை நீடித்து வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு