அடிப்படை உரிமைகளுக்கு ஜனாதிபதி ரணில் நிர்வாகம் மதிப்பளிக்க வேண்டும் – HRW

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

அமைதியான போராட்டம் உட்பட அடிப்படை உரிமைகளுக்கு ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் மதிப்பளிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

அமைதியான போராட்டத்தை அதிகாரிகள் ஒடுக்கியுள்ளனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆர்ப்பாட்டங்களை நசுக்கியுள்ளதுடன், மாணவர் செயற்பாட்டாளர்களை தடுத்து வைப்பதற்கு இழிவான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்தியுள்ளார் என்றும் அந்தக் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதாகவும் பாரிய எதிர்ப்புக்கள் ஏற்பட்டால் பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்துவதாகவும் எச்சரித்துள்ளதாக அந்தக் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இலங்கையின் சர்வதேச பங்காளிகள் நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அத்தியாவசிய நடவடிக்கையாக மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு கடனாளிகளின் நடவடிக்கையின்றி இலங்கையின் பொருளாதார நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது மில்லியன் கணக்கான மக்களின் அடிப்படைத் தேவைகளை மேலும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி அந்தக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு, சர்வதேச கடன் வழங்குநர்கள் இலங்கையின் கடனை மறுசீரமைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன்மூலம் நாடு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்கான இறுதி அனுமதியைப் பெற முடியும் என்பதுடன், பிற உலகளாவிய முகவர்களிடமிருந்து நிதியுதவி பெற முடியும் என்றும் அந்தக் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா உட்பட இலங்கையின் முக்கிய வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் பொருளாதார நெருக்கடியின் பாதகமான மனித உரிமை தாக்கங்களை அவசரமாக தணிக்க வேண்டும் என்றும் அந்தக் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புகளை வைத்து,தேவையான நிதியை விரைவில் கிடைக்கச் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் அதன் நடைமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.